பெருந்துறை அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலைஉறவினர்களுக்கு தெரிந்ததால் விபரீத முடிவு
பெருந்துறை அருகே உறவினர்களுக்கு தெரிந்ததால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டனா்.
பெருந்துறை அருகே கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். உறவினர்களுக்கு தெரிந்துவிட்டதால் அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தூக்கில் பிணங்கள்
பெருந்துறை அருகே உள்ள பொன்முடி புதுப்பாளையம் காட்டு பகுதியில் ஒரு ஆண், ஒரு பெண் மரத்தில் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதாக பெருந்துறை போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அழுகிய நிலையில் மரத்தில் தொங்கிக்கொண்டு இருந்த உடல்களை கீழே இறக்கினர். பிறகு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல்களை அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் பிணமாக தொங்கியவர்கள் யார்? என்று விசாரணை நடத்தினார்கள். அதில் தூக்கில் தொங்கிய பெண் பொன்முடியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மனைவி கலைச்செல்வி (வயது 33) என்பதும், ஆண் அதே ஊரைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் தீபன்ராஜ் (25) என்பதும் தெரியவந்தது.
கள்ளக்காதல்
தீபன்ராஜ் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். கலைச்செல்விக்கும், தீபன்ராஜூக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்தநிலையில் இவர்களுடைய கள்ளக்காதல் இரு தரப்பு வீட்டாருக்கும், உறவினர்களுக்கும், ஊரில் உள்ளவர்களுக்கும் தெரிந்துவிட்டது. இதனால் அவமானம் தாங்காமல் கள்ளக்காதல் ஜோடி வீட்டை விட்டு ெவளியேறி புதுப்பாளையம் காட்டுப்பகுதிக்கு சென்று மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் ஜோடி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.