பண்ணாரி அருகே லாரியை மறித்து கரும்பை ருசித்த யானை

பண்ணாரி அருகே லாரியை மறித்து யானை கரும்பை ருசித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-10-07 21:25 GMT

சத்தியமங்கலம்

பண்ணாரி அருகே லாரியை மறித்து யானை கரும்பை ருசித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரும்பு லாரிகள்

கர்நாடக மாநிலத்தில் இருந்து பண்ணாரி அருகே உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு நாள்தோறும் கரும்புகளை ஏற்றிக்கொண்டு லாரிகள் ஆசனூர், திம்பம் வழியாக வருகின்றன. கரும்பு லோடு ஏற்றிவரும் டிரைவர்கள் ரோட்டு ஓரத்தில் உலா வரும் யானைகளுக்கு கரும்பு கட்டுகளை போட்டு பழக்க படுத்திவிட்டார்கள்.

அதனால் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் யானைகள் நடுரோட்டுக்கு வந்து நின்றுவிடுகின்றன. அந்த வழியாக கரும்பு லோடு ஏற்றி வரும் லாரிகளை மறித்து கரும்புகளை பிடுங்கி ருசிக்கின்றன. இதனால் அவ்வப்போது போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.

யானை மறித்தது

இந்த நிலையில் நேற்று மாலை கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து திம்பம் வழியாக பண்ணாரிக்கு கரும்பு பாரம் ஏற்றிய லாரி வந்துகொண்டு இருந்தது. அப்போது சாலையோரம் நின்றிருந்த ஒரு யானை திடீரென ரோட்டுக்கு வந்து லாரியை மறித்தது. பின்னர் லாரியில் இருந்த கரும்புகளை எடுத்து ருசிக்க தொடங்கியது. சுமார் 20 நிமிடம் யானை கரும்பை சுவைத்தபடியே இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் வேறு வழியில்லாமல் டிரைவர் மெதுவாக லாரியை இயக்கினார். யானையும் அதற்கு ஏற்றபடி ஓடிவந்து கரும்பை ருசித்தது. பின்னர் டிரைவர் மேலும் வேகமாக லாரியை இயக்கியதால் யானையால் பின்ெதாடர்ந்து ஓடிவர முடியவில்லை. அதனால் வேறு வழியின்றி யானை காட்டுக்குள் சென்றுவிட்டது. அதன்பின்னரே மற்ற வாகனங்கள் செல்ல தொடங்கின. 

Tags:    

மேலும் செய்திகள்