பழையகாயல் அருகேஉப்பளத்தில் தொழிலாளி மர்மச்சாவு:போலீசார் விசாரணை

பழையகாயல் அருகே உப்பளத்தில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-03 18:45 GMT

ஆறுமுகநேரி:

பழையகாயல் அருகே உப்பளத்தில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உப்பள தொழிலாளி

பழைய காயலை அடுத்துள்ள புல்லாவெளி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 37). இவருக்கு முத்து செல்வி என்ற மனைவியும், 2மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

கணவன், மனைவி இருவரும் புல்லாவெளி அருகே உள்ள உப்பளத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தனர்.

வழக்கம் போல கடந்த 2-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு இருவரும் உப்பளத்திற்கு வேலைக்கு சென்று விட்டு காலை 6 மணிக்கு வீடு திரும்பினர். சிறிதுநேரத்தில் மீண்டும் செந்தில் வேல் உப்பளத்தில் தண்ணீர் பாய்ச்சி விட்டு வருவதாக கூறி மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

வீடு திரும்பவில்லை

ஆனால் மாலை வரை அவர் வீடு திரும்பாத நிலையில் முத்துச்செல்வி, அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முத்து செல்வி, மகள் சகுந்தலாவுடன் கணவரை தேடி உப்பளத்திற்கு சென்றுள்ளார்.

உப்பளக்கரையில் செந்தில்வேலின் மோட்டார் சைக்கிள் நின்று உள்ளது. ஆனால் அவரை காணவில்லை. இதுகுறித்த அவர் கொடுத்த தகவலின் பேரில், உறவினர் பேச்சிராஜா, உப்பள மேஸ்திரி செல்வின் உப்பள பகுதிக்கு சென்று தேடினர். அப்போது அங்குள்ள உப்பளதண்ணீர் தெப்பத்தில் கவிழ்ந்த நிலையில் செந்தில்வேல் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

சாவில் மர்மம்

பதறிப்போன அவர்கள், அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக முத்துசெல்வி ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் தனது கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக செய்துள்ளார். இதுகுறித்து. ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று செந்தில்வேல் உடலை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும், இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உப்பளத் தொழிலாளி மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்