மேலூர் அருகே கிரானைட் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு; பெண்கள் தொடர் போராட்டம்
மேலூர் அருகே கிரானைட் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.;
மேலூர்
குடிநீர் ஆதாரம்
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் சேக்கிபட்டி, அய்யாபட்டி ஊராட்சிகளில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் கற்பாறைகளால் உருவான பெரிய பரப்பளவு உள்ள மலைகள் உள்ளன. இப்பகுதி கால்வாய் பாசன வசதி இல்லாத பகுதியாகும். இதனால் மழைக்காலங்களில் இந்த பெரிய மலைகளில் உருவாகி பெருக்கெடுத்து வரும் மழை நீரை கண்மாய்கள், குளங்கள் ஆகியவற்றில் சேமித்து வைத்து இப்பகுதி கிராமங்களில் உள்ள மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ள இப்பகுதியில் இந்த மலைகளில் உருவாகும் நீரையே குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ளனர்.
கிரானைட் குவாரிகள்
இந்தநிலையில் இப்பகுதியில் 3 மலைகளில் 20 ஆண்டுகளுக்கு கிரானைட் கற்களை வெட்டி எடுக்க மாவட்டம் சார்பில் டெண்டர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த இப்பகுதி மக்கள் இந்த மலைகளில் கிரானைட் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். கிரானைட் குவாரிகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேக்கிபட்டியில் காத்திருப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட கிராம மக்கள் முடிவு செய்து அறிவித்தனர்.
இதனையடுத்து இப்பகுதியில் உள்ள சேக்கிபட்டி, கம்பூர், அய்யாபட்டி, ஓட்டகோவில்பட்டி, திருச்சுனை, கற்பூரம்பட்டி, உடப்பன்பட்டி, வீரசிங்கம்பட்டி, பாறை அம்மாபட்டி, குன்னாரம்பட்டி, ஆலம்பட்டி, செக்கடிப்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் சேக்கிபட்டியில் மந்தை திடலில் அமைக்கப்பட்டுள்ள பெரிய பந்தலில் கைக்குழந்தைகளுடன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிப்பு
இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சியினரும், இயற்கை மற்றும் சமூக ஆர்வலர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறியதாவது, மேலூர் பகுதியில் இயங்கிய 100-க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகள் உட்பட மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் இயங்க தமிழக அரசு 2014-ம் ஆண்டு தடை விதித்தது.
இந்நிலையில் இப்பகுதியில் உள்ள 3 மலைகளில் கிரானைட் குவாரிகள் செயல்பட அனுமதிக்க கூடாது. குவாரிகளுக்கு அனுமதி வழங்கினால் இந்த மலைகளையே நீர் ஆதாரமாக நம்பி வாழும் இப்பகுதி கிராம மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். விவசாய நிலங்கள் அழிந்து விடும். குவாரிகளுக்கு அனுமதி வழங்கினால் இப்பகுதி கிராம மக்கள் அனைவரும் தங்களுடைய வாக்காளர் அட்டைகளை ரத்து செய்து விடுவோம் என்றனர். போராட்டம் நடைபெறும் இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.