குறிஞ்சிப்பாடி அருகே; 2¾ டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

குறிஞ்சிப்பாடி அருகே 2¾ டன் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-13 18:45 GMT

கடலூர்

கடலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் நேற்று குறிஞ்சிப்பாடி ராசாக்குப்பம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 4 இருசக்கர வாகனங்களில் 4 பேர் சந்தேகமான முறையில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதையடுத்து அவர்களை போலீசார் துரத்தினர். அதில் 3 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரிடம் போலீசார் விசாரித்த போது, அவர் குள்ளஞ்சாவடி தங்கலிகுப்பத்தை சேர்ந்த கோபிநாத் (வயது 42) என்பதும், தப்பி ஓடியது கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விஷால்ராஜ்(23) என்பதும், மற்ற 2 பேர் கூலி வேலைக்கு வந்ததும், விஷால்ராஜூம், கோபிநாத்தும் ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, அதை நாமக்கல் கோழிப்பண்ணைகளுக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கடத்தி செல்ல முயன்ற 2¾ (2800 கிலோ) டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, கோபிநாத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்