கோவில்பட்டி அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டி அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-11-25 18:45 GMT

பாண்டவர்மங்கலம்:

கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

பறிமுதல்

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜன் மற்றும் போலீசார் கோவில்பட்டி பாண்டவர் மங்கலம் கண்மாய்க்கு அருகே உள்ள காலி இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதனை சோதனை செய்த போது, மொத்தம் 45 கிலோ எடை கொண்ட 36 மூட்டைகளில் 1620 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், கோவில்பட்டியை சேர்ந்த முத்துமாரியப்பன் என்ற சின்னமாரி என்பவர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இது குறித்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து முத்துமாரியப்பன் என்ற சின்னமாரியை தேடி வருகின்றனர்.

கைது

இதே போன்று கடலையூர் பஜாரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, மோட்டார் சைக்கிளில் 2 மூட்டைகளில் 100 கிலோ ரேஷன் அரிசியுடன் வந்த மாரிமுத்து (வயது 40) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் அந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட மேலும் 5 மூட்டைகளில் இருந்த 250 கிலோ ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து மாரிமுத்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்