கோத்தகிரி அருகே பழங்குடியின கிராமத்தில் குட்டிகளுடன் காட்டு யானைகள் முகாம்- பொதுமக்கள் பீதி
கோத்தகிரி அருகே உள்ள கோழிக்கரை கிராமத்திற்கு செல்லும் வழியில் தனியார் எஸ்டேட்டில் குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள், தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள கோழிக்கரை கிராமத்திற்கு செல்லும் வழியில் தனியார் எஸ்டேட்டில் குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள், தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
காட்டு யானைகள் முகாம்
கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் காரணமாக அங்கு பயிரிடப்பட்டுள்ள பலா மரங்களில் பலாக்காய்கள் காய்த்துக் குலுங்குகின்றன. பழங்களை உண்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து ஏராளமான காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்து முகாமிட்டுள்ளன. இவ்வாறு வந்து முகாமிட்டுள்ள காட்டு யானைகள் கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையிலும், பழங்குடியின கிராம குடியிருப்புப் பகுதிகளிலும் அடிக்கடி உலா வருகின்றன.
இந்தநிலையில் மாமரம் கிராமத்தில் இருந்து கோழிக்கரை கிராமத்திற்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான எஸ்டேட்டில் உள்ள பலாமரங்களில் காய்த்துள்ள பழங்களை உண்பதற்காக அப்பகுதியில் 3 குட்டிகளுடன் சுமார் 6 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்
இதனால் தனியார் எஸ்டேட்டில் பணி புரியும் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளதோடு, அங்குள்ள மரங்கள் மீது ஏறி சத்தம் போட்டு யானைகளை விரட்டி வருகின்றனர். காட்டு யானைகள் கோழிக்கரைக்கு செல்லும் சாலையில் உலா வருவதுடன், அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து விடுகின்றன. மேலும் சாலை வழியாக நடந்து செல்லும் பழங்குடியின மக்களை, குட்டிகளுடன் வரும் காட்டு யானைகள் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே குட்டிகளுடன் முகாமிட்டுள்ள யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதிவாசி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.