கோத்தகிரி அருகே தும்பூர் அரசு பள்ளியில் சப்-கலெக்டர் ஆய்வு- புதிய கழிப்பிடம் கட்டிக் கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

கோத்தகிரி அருகே உள்ள தும்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்த சப்-கலெக்டர், பள்ளி வளாகத்திலேயே புதிய கழிப்பிடம் கட்டிக் கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Update: 2022-07-06 12:54 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள தும்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்த சப்-கலெக்டர், பள்ளி வளாகத்திலேயே புதிய கழிப்பிடம் கட்டிக் கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பள்ளியில் கழிப்பிடம் கட்ட வேண்டும்

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட தும்பூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப்பள்ளி குழந்தைகள் பயன்படுத்துவதற்காக பள்ளியில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் கழிப்பிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பிடம் உரிய பராமரிப்பின்றி உள்ளதுடன், கழிப்பிடம் தொலைவில் உள்ளதால் மழை காலங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க பள்ளிக் குழந்தைகள் செல்வதற்கு சிரமப்பட்டு வந்தனர். எனவே பள்ளி வளாகத்திலேயே புதிய கழிப்பிடம் கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி முகாமில் நேரில் மனு அளித்தனர்.

சப்-கலெக்டர் ஆய்வு

இந்தநிலையில் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தும்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தார். அப்போது கிராம மக்களின் சிலர் கோவிலுக்கு வெகு அருகாமையில் பள்ளி அமைந்துள்ளதால், அங்கு கழிப்பிடம் கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என ஆட்சேபனை தெரிவித்தனர். அதற்கு சப்-கலெக்டர் கோவிலுக்கு அருகே ஏராளமான வீடுகளும், அவற்றில் கழிப்பிடங்களும் கட்டப்பட்டுள்ள நிலையில், பள்ளி வளாகத்தில் குழந்தைகள் நலன் கருதி கழிப்பிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என அறிவுறுத்தியதுடன், பள்ளி வளாகத்தில் உள்ள ஒதுக்குப் புறமான பகுதியில் கழிப்பிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அதற்கான திட்ட மதிப்பீட்டை விரைவில் தனக்கு அனுப்பி வைக்குமாறும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த ஆய்வின் போது கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால், வருவாய் ஆய்வாளர் தீபக், ஜக்கனாரை ஊராட்சி செயலர் மூர்த்தி உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்