கொடுமுடி அருகே கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
கொடுமுடி அருகே கார், மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக பொருட்கள் வாங்க சென்ற வாலிபர் பலி ஆனார்.;
கொடுமுடி
கொடுமுடி அருகே கார், மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக பொருட்கள் வாங்க சென்ற வாலிபர் பலி ஆனார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வளைகாப்பு நிகழ்ச்சிக்காக...
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள வேட்டமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 27). இவர் தனியார் சிமெண்டு குழாய்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி பவித்ரா (21). 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். பவித்ராவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வேட்டமங்கலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளார்.
சாவு
கொடுமுடியை அடுத்த சோளக்காளிபாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த காரும், பிரேம்குமாரின் மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து பிரேம்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். மேலும் சாலையோரத்தில் கவிழ்ந்தது. உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பிரேம்குமார் இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு பொருட்கள் வாங்க சென்றபோது விபத்தில் கணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.