கோபி அருகே கணவர் இறந்த துயரத்தில் மறுநாள் மனைவியும் சாவு
கணவர் இறந்த துயரத்தில்
கோபி அருகே கணவர் இறந்த துயரத்தில் மறுநாள் மனைவியும் இறந்தார்.
விவசாயி
கோபியை அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி சின்னாரி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கே.பி.கிருஷ்ணமூர்த்தி (வயது 86). விவசாயி. இவருைடய மனைவி கே.சாவித்திரி (82). கணவனுக்கு உதவியாக இவர் விவசாயம் செய்து வந்து உள்ளார். 2 பேருக்கும் திருமணம் ஆகி 65 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு கண்ணப்பன் (60) என்ற மகனும், பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளு பேத்தியும் உள்ளனர்.
சாவு
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் வயது முதிர்வு காரணமாக கே.பி.கிருஷ்ணமூர்த்தி இறந்தார். இதைத்தொடர்ந்து அவருடைய தோட்டத்திலேயே கே.பி.கிருஷ்ணமூர்த்தியின் உடல் நேற்று முன்தினம் எரியூட்டப்பட்டது. இதனிடையே கணவன் இறந்த துயரத்தில் அவருடைய மனைவி சாவித்திரி இருந்து உள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் அதே 2 மணி அளவில் சாவித்திரியும் இறந்தார். இதையடுத்து அவருடைய உடலும் கணவர் எரியூட்டப்பட்ட இடத்தின் அருகிேலயே நேற்று எரியூட்டப்பட்டது. 65 ஆண்டுகள் இணை பிரியாமல் இருந்த கணவர் இறந்த துயரம் தாங்காமல் மறுநாள் அவருடைய மனைவியும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.