கோபி அருகே காரில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

வாலிபர் கைது

Update: 2022-11-03 19:30 GMT

கோபி அருகே, காரில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வாகன தணிக்கை

கோபி அருகே உள்ள எருமைக்காரபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் எருமைக்காரபாளையம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

வாலிபர் கைது

அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 35) என்பது தெரியவந்தது. மேலும் அவர் ரேஷன் அரிசியை கடத்தி அதை வடமாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1,200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, 'ரேஷன் அரிசியை கடத்தி தொடர்ந்து விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்