கண்டமனூர் அருகேவேன் மீது டிராக்டர் ேமாதியதில் பெண்ணின் கை துண்டானது
கண்டமனூர் அருகே வேன் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பெண்ணின் கை துண்டானது.;
பெரியகுளம் அருகே உள்ள ஏ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரியா (வயது 30). நேற்று முன்தினம் பிரியா தனது உறவினர்களுடன் கண்டமனூர் அருகே கணேசபுரம் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வேனில் சென்றார். பின்னர் இரவு திருமணம் முடிந்து அனைவரும் அதே வேனில் ஏ.வாடிப்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது பிரியா வேனின் வலதுபுற ஜன்னலுக்கு வெளியே கையை வைத்த படி அமர்ந்திருந்தார்.
கண்டமனூர்-கணேசபுரம் சாலையில் அங்காள ஈஸ்வரி கோவில் அருகே சென்றபோது, எதிரே வந்த டிராக்டர் வேனின் வலது புறமாக உரசியபடி நிற்காமல் சென்றது. இதில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த பிரியாவின் வலது கை துண்டாகி கீழே விழுந்தது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார். உடனடியாக வேனில் இருந்தவர்கள் பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.