கயத்தாறு அருகே விவசாயி மீது தாக்குதல்
கயத்தாறு அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்திய மூன்று பேரை போலீசார் தேடிவருகின்றனர்.;
கயத்தாறு:
கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடி கிராமத்தை சேர்ந்த செல்லையா மகன் செல்வம் (வயது 33). விவசாயி. இவர் தோட்டத்தில் விளையும் அகத்தி கீரைகளை தாழையூத்து பஜாரில் வியாபாரம் செய்து வந்தார். அங்கு காய்கறிகள் வாங்க வந்த தாதனூத்தை சேர்ந்த பெருமாள் என்பவரது மனைவியுடன் செல்வத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நீண்டநாட்களாக போனில் பேசி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வத்துக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமாகி 2 வயதில் குழந்ைத உள்ளது. இதை தொடர்ந்து அந்த இளம்பெண்ணுடன் பேசுவதை செல்வம் நிறுத்து கொண்டாராம். ஆனாலும், அந்த இளம்பெண் அடிக்கடி செல்வத்துடன் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தனக்கு திருமணமாகி விட்டதால், போன் செய்ய வேண்டாம் என்று அந்த பெண்ணை செல்வம் கண்டித்துள்ளார். இதை ஏற்க மறுத்த அந்த பெண் செல்வத்துக்கு அடிக்கடி போன் ெசய்து வந்ததால், போலீசாரிடம் செல்வம் புகார் தெரிவித்துள்ளார். அந்த இளம்பெண்ணை போலீசார் கண்டித்துள்ளனர். இதையும் மீறி அந்த இளம்பெண் செல்வத்துடன் போனில் அடிக்கடி தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். இதை அறிந்த பெருமாள், மனைவியை கண்டித்துள்ளார். மேலும் ஆத்திரமடைந்த பெருமாள் சமரசம் பேசுவதற்காக செல்வத்தை மேட்டுப்பிராஞ்சேரி கருப்பசாமி கோவில் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு 2 நண்பர்களுடன் சேர்ந்து பெருமாள் உள்ளிட்ட 3 பேரும் செல்வத்தை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.5ஆயிரம், 1½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனராம். இதில் காயமடைந்த செல்வம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாள் உள்ளிட்ட 3 பேரை தேடிவருகின்றனர்.