எட்டயபுரம் அருகேமுதியவரை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு
எட்டயபுரம் அருகே முதியவரை கத்தியால் குத்தி செல்போனை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.;
எட்டயபுரம்:
எட்டயபுரம் தெற்கு ரதவீதியை சேர்ந்தவர் முத்தையா (வயது 73). இவர் நேற்று முன்தினம் மாலையில் எட்டயபுரத்திலிருந்து கீழஈராலுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பவர்கிரிட் அருகே சென்றபோது மொபட் டயர் பஞ்சராகியுள்ளது. இதனால் மொபட்டை உருட்டிக்கொண்டு அவர் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 30வயது மதிக்கத்தக்க வாலிபர் அவர் அருகில் வந்து நிறுத்தியுள்ளார். திடீரென்று கத்தியை காட்டி மிரட்டியவாறு முதியவர் வைத்திருந்த செல்போனை கேட்டுள்ளார். முதியவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் கத்தியால் முதியவரை குத்தியுள்ளார். இதில் அலறி துடித்த முதியவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்ட வாலிபர் மோட்டார் சைக்கிளில் ஏறிதப்பி சென்று விட்டார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை கத்தியால் குத்தி செல்போனை பறித்து சென்ற வாலிபரை தேடிவருகின்றனர்.