எட்டயபுரம் அருகே புகார் கொடுக்க சென்ற 2 பெண்களிடம் விசாரணை; போலீஸ் நிலையம் முற்றுகை
எட்டயபுரம் அருகே புகார் கொடுக்க சென்ற 2 பெண்களிடம் போலீசார் நீண்டநேரம் பிடித்து வைத்து விசாரணை நடத்தியதை கண்டித்து பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே அகதிகள் முகாமில் நடந்த கோஷ்டி மோதல் தொடர்பாக புகார் கொடுக்க சென்ற 2 பெண்களிடம் போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தியதாக கூறி போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது. இந்த வழக்கில் வாலிபர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோஷ்டி மோதல்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி முகாமில் 2 நாட்களுக்கு முன்பு கபடி போட்டி நடைபெற்றது. அப்போது குகன் என்பவர் மது போதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போட்டி ஏற்பாட்டாளர்கள் அவரை கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் காலையில் குகன் மற்றும் சிலர் மது அருந்தி விட்டு தகராறு செய்துள்ளனர். மேலும், அருகில் உள்ள சுதாகரன் என்பவர் வீட்டிற்குள் சென்று அவரது இரு மகள்களை குகன் மிரட்டியுள்ளார். இதை சிலர் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்தது. குகனுக்கு ஆதரவாக சிலர் வந்துள்ளனர். இதனால் குகன் தரப்பினருக்கும், பொதுமக்கள் சிலருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினர்.
பெண்களிடம் விசாரணை
இந்த நிலையில் சுதாகரன் மனைவி சகாயராணி தனது வீட்டில் நுழைந்து தகராறு செய்த குகன் மற்றும் அவரது உறவினர் மீது புகார் கொடுக்க தனது உறவினர் பஞ்வர்ணம் மற்றும் குழந்தைகளுடன் மாசார்பட்டி போலீஸ் நிலையம் சென்றனர்.
அப்போது போலீசார், குழந்தைகளை வெளியே அனுப்பி விட்டு சகாயராணி, பஞ்சவர்ணம் ஆகிய இருவரையும் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதை அறிந்த சகாயராணி உறவினர்கள் மற்றும் முகாமிலுள்ள பெண்கள் சிலர் திரண்டு வந்து போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அந்த 2 பெண்களையும் போலீசார் வெளியே அனுப்ப மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
முற்றுகை போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்களும், பெண்களும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் அந்த 2 பேரையும் வெளியே அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து சகாயராணி கொடுத்த புகாரின்பேரில் குகன், அவரது தம்பி தாஸ் உள்ளிட்ட 6 பேர் மீதும், குகன் கொடுத்த புகாரில் ஆனந்தராஜ், சிவக்குமார், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் என 16 பேர் மீது மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் இருதரப்பையும் ேசர்ந்த குகன் (வயது 30), தாஸ் (24), சிவக்குமார் (39), ராதாகிருஷ்ணன் (40) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-------------------