தேவதானப்பட்டி அருகேகிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றி மீட்பு
தேவதானப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றியை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு அதே பகுதியில் தென்னந்தோப்பு உள்ளது. நேற்று இவர், அந்த தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது கிணற்றில் இருந்து ஏதோ சத்தம் கேட்டது. இதையடுத்து அவர் கிணற்றில் எட்டி பார்த்தார். அப்போது காட்டுப்பன்றி குட்டி ஒன்று தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது.
இதைக்கண்ட அவர் பெரியகுளம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து செல்வம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கிணற்றில் இறங்கி வலை மூலம் காட்டுப்பன்றி குட்டியை மீட்டனர். பின்னர் காட்டுப்பன்றியை மஞ்சளாறு வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர். இரை தேடி வந்தபோது காட்டுப்பன்றி கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்று வனத்துறையினர் கூறினர்.