தேவதானப்பட்டி அருகே விவசாயி வீட்டில் 14 பவுன் நகை திருட்டு
தேவதானப்பட்டி அருகே விவசாயி வீட்டில் 14 பவுன் நகைகள் திருடுபோனது.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.மீனாட்சிபுரம் கருப்பையா நாயக்கர் தெருவை சேர்ந்தவர் முத்தையா (வயது 40). விவசாயி. இவர் தினந்தோறும் வீட்டை பூட்டி விட்டு சாவியை வெளிப்புற ஜன்னலில் வைத்து விட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இவர், வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னலில் வைத்து விட்டு சென்றார். மாலை வீடு திரும்பியபோது கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த தங்க சங்கிலி, ேமாதிரம், நெக்லஸ் உள்ளிட்ட 14 பவுன் நகைகள் திருடுபோய் இருந்தது. தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். விசாரணை நடத்தியதில் முத்தையா வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் முத்தையா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.