சின்னமனூர் அருகே மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்
சின்னமனூர் அருகே மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.;
மதுரை மாவட்டம் செக்கானூரணியை சேர்ந்த 22 பேர் வேனில் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலைக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அவர்கள் அங்கிருந்து வேனில் மதுரைக்கு புறப்பட்டனர். மேகலை-சின்னமனூர் மலைப்பாதையில் வேன் சென்றது. தமிழன் காடு என்ற இடத்தில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது.
அப்போது வேனில் இருந்தவர்கள் அய்யோ, அம்மா காப்பாற்றுங்கள் என்று அபயகுரல் எழுப்பினர். ஒரு கட்டத்தில் வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனின் இடிபாடுகளில் சிக்கிய நித்யா (வயது 34), திவ்யா (28), சத்யா (38), விஜய் கிருஷ்ணன் (10), மகேஷ்வரன் (40), ஜெயப்பிரியா (32) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். மற்ற அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.