இடநெருக்கடியில் சாத்தூர் பஸ்நிலையம்

இடநெருக்கடியில் உள்ள சாத்தூர் பஸ்நிலையம் எப்போது விரிவாக்கம் செய்யப்படும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.;

Update: 2022-10-23 20:20 GMT

சாத்தூர், 

இடநெருக்கடியில் உள்ள சாத்தூர் பஸ்நிலையம் எப்போது விரிவாக்கம் செய்யப்படும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

மாரியம்மன் கோவில்

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்த கோவிலுக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பேர் வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வருபவர்களில் எண்ணற்ற பேர் சாத்தூர் வந்து தான் இருக்கன்குடிக்கு செல்கின்றனர். சாத்தூர் பஸ்நிலையமும், ரெயில் நிலையமும் அருகருகே அமைந்துள்ளது.

ஆதலால் ரெயிலில் வரும் பயணிகளும் இங்கு வந்து தான் பஸ் ஏறி இருக்கன்குடி கோவிலுக்கு செல்கின்றனர். இவ்வாறு தினமும் எண்ணற்ற மக்கள் வந்து செல்லும் சாத்தூர் பஸ்நிலையம் விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

சாத்தூர் பஸ்நிலையம்

சாத்தூர் பஸ்நிலையம் 1984-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதையடுத்து 2,000-ம் ஆண்டு போதிய அளவு கடைகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்பின்னர் எந்த ஒரு சீரமைப்பு பணியும் மேற்கொள்ளாததால் கடைகள், குடிநீர் தொட்டிகள், கட்டண கழிப்பறைகள், வாகன நிறுத்தும் கட்டிடங்கள் ஆகியவை சேதமடைந்து காணப்படுகிறது.

சாத்தூர் பஸ்நிலையத்தில் இருந்து சிவகாசி, விருதுநகர், கோவில்பட்டி, கோட்டூர், புதூர், பெ.நாகலாபுரம், வெம்பக்கோட்டை, ஆலங்குளம் ஆகிய பகுதிகளுக்கு நகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல சாத்தூரில் இருந்து கோவை, மேட்டுப்பாளையம், திருச்சி, ராஜபாளையம், தென்காசி, சங்கரன்கோவில், நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் பஸ்நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் நெடுந்தூர பஸ்கள் காலப்போக்கில் பஸ்நிலையத்தின் வெளிப்பகுதியில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.

அலைக்கழிக்கப்படும் பயணிகள்

மேலும் நாட்கள் செல்ல செல்ல பஸ்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் மதுரை பஸ் நிறுத்தம் என ஒரு பகுதி உருவாக்கப்பட்டு அந்தப்பகுதியில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் அங்கும், இங்குமாக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

வழக்கத்தை காட்டிலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இருக்கன்குடி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இவ்வாறு வரும் பயணிகள் உட்காருவதற்கு ேபாதுமான இருக்கை வசதி இல்லை. இங்குள்ள நகராட்சி கட்டண கழிப்பறையின் கட்டிடங்கள் இடிந்த நிலையில் உள்ளது. தற்போதுள்ள சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகன நிறுத்தும் இடமும் போதிய இடவசதி இல்லாததால் சாலை ஓரங்களில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆதலால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாத்தூர் பஸ்நிலையத்தை விரிவாக்கம் செய்வதுடன், அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடைக்குள் கசியும் மழைநீர்

இதுகுறித்து வன்னிமடையை சேர்ந்த வியாபாரி ஜெயக்கொடி கூறுகையில், பஸ்நிலையத்தில் 1984-ம் ஆண்டு கட்டப்பட்ட கடைகள் மற்றும் மேற்கூரைகள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த மேற்கூரைகள் ஆங்காங்கே சேதம் அடைந்து மழை காலங்களில் மழை நீர் கசிகிறது.

இதனால் பயணிகள் மழைக்கு கூட ஒதுங்க முடியாத நிலை உள்ளது. ஆதலால் பெரிய அளவில் விபத்து எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்.

பயணியான பாஸ்கரன் கூறியதாவது:- சாத்தூர் பஸ்நிலையத்தில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இங்குள்ள கழிவறையை பராமரிப்பதுடன், போதுமான அளவு தெருவிளக்குகளை அமைக்க வேண்டும். 

Tags:    

மேலும் செய்திகள்