போடி அருகே ஜல்லிக்கட்டு காளையை கொன்ற 2 பேர் கைது

போடி அருகே ஜல்லிக்கட்டு காளையை கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-13 18:45 GMT

போடி அருகே உள்ள கரட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பவுன் பாண்டியன். இவர், ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வந்தார். கடந்த 11-ந்தேதி இவர், அந்த காளையை போடி அருகே உள்ள முந்தல் பகுதியில் உள்ள ராமு என்பவரின் மாந்தோப்பில் கட்டி போட்டிருந்தார். மறுநாள் காலையில் அவர் அங்கு வந்து பார்த்தார்.

அப்போது ஜல்லிக்கட்டு காளையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காளையை தேடி அலைந்தார். அப்போது மலையடிவாரத்தில் முருகன் என்பவரது தோட்டத்தில் அந்த காளை இறந்து கிடந்தது. மேலும் அருகே உள்ள மகாலிங்கம் என்பவரது தோட்டத்தில் மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த கயிறு, மணி கிடந்தது. இதுகுறித்து பவுன் பாண்டியன் குரங்கணி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போடி புதூரை சேர்ந்த கருப்பசாமி (22), போடியை சேர்ந்த சிவா (19) ஆகியோர் இறைச்சிக்காக காளையை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்