பங்களாப்புதூர் அருகே டீக்கடையில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்
பங்களாப்புதூர் அருகே டீக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது.
டி.என்.பாளையம்
பங்களாப்புதூர் அருகே உள்ள புஞ்சைதுறையம்பாளையம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 49). இவர் அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் டீக்கடையை பூட்டி விட்டு மாரியப்பன் வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில் இரவு 2.30 மணியளவில் மாரியப்பன் டீக்கடை தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் டீக்கடை மற்றும் மாரியப்பனின் வீட்டின் மேற்கூரை, கடையில் இருந்து பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகின. மேலும் கடையில் இருந்து 2 கியாஸ் சிலிண்டர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பங்களாப்புதூர் போலீசார் தீ விபத்து நடந்த கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் நேற்று இரவு டீக்கடையின் விறகு அடுப்பில் இருந்த கட்டையில் தீ முழுமையாக அணைக்காமல் இருந்துள்ளதால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.