ஆத்தூர் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது

ஆத்தூர் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-20 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆத்தூர் போலீஸ் சரகம் பழைய காயலை அடுத்துள்ள புல்லாவெளி மேலத்தெருவை சேர்ந்த சண்முகவேல் மகன் கண்ணன் (வயது 51). கூலி தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (41). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் வசந்தி ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். தினமும் காலையில் வேலைக்கு செல்பவர் இரவு திரும்புவது வழக்கம். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கண்ணன் தனது மனைவியிடம் நீ மற்றவர்களுடன் போனில் பேசி வருகிறாய். அது தவறு. இனிமேல் மற்றவர்களுடன் போனில் பேசக்கூடாது என கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் வசந்தி கோபித்து கொண்டு, தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்பு ஊர் பெரியவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் வீடு திரும்பிய வசந்தி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து மற்றவரிடம் போனில் பேசியதாக கருதி கோபமடைந்த கண்ணன் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு வந்த வசந்தியிடம் தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த கண்ணன் அரிவாளால் வசந்தியை வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வசந்தியை மீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்