ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானை

ஆசனூர் அருகே வாகனங்களை காட்டு யானை வழிமறித்தது.

Update: 2023-06-15 21:37 GMT

தாளவாடி

ஆசனூர் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறி உணவு மற்றும் தண்ணீர் தேடி அங்குள்ள திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையை அடிக்கடி கடந்து செல்கின்றன. அப்போது அந்த வழியாக கரும்பு பாரம் ஏற்றி செல்லும் லாாிகளை வழிமறித்து அதில் இருந்து கரும்புகளை பிடுங்கி தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் ஆசனூரை அடுத்த அரேபாளையம் பிரிவு அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு வந்தது. பின்னர் அந்த வழியாக வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி கரும்பு இருக்கிறதா? என துதிக்கையால் தடவி பார்த்தது. மேலும் அந்த தேசிய நெடுஞ்சாலையிலேயே உலா வந்தபடி வாகனங்களை வழி மறித்து நின்றது. யானையை கண்டதும், வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை அப்படியே நிறுத்தினர். இதனால் அந்த சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 15 நிமிடத்துக்கு பின்னர் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றன. கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் சாலையில் உலா வருவதும் வாகனங்களை துரத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்