ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்த ஒற்றை யானை;போக்குவரத்து பாதிப்பு
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்த ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்த ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகம்-கர்நாடகா
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஆசனூர், கேர்மாளம், ஜீர்கள்ளி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்து எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
உணவு-தண்ணீர்
அடர்ந்த வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி யானைகள் அடிக்கடி வெளியேறுகின்றன. அவ்வாறு வெளியேறும் யானைகள் சாலை ஓரங்களில் வந்து நின்று கொள்கின்றன. மேலும் அந்த வழியாக வரும் கரும்பு லாரிகளை வழி மறித்து கரும்புகளை தின்பது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்படுகிறது.
போக்குவரத்து பாதிப்பு
இந்தநிலையில் நேற்று காலை ஆசனூரில் இருந்து தாளவாடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சாலையில் வந்து நின்று கொண்டது. பின்னர் சாலையோரங்களில் கிடக்கும் கரும்பு துண்டுகளை தின்று கொண்டு அங்கும் இங்குமாக உலா வந்தது. அதனைதொடர்ந்து சாலையின் நடுவில் வந்து நின்று கொண்டு வாகனங்களை வழிமறித்தது.
இதனால் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டனர். மேலும் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 15 நிமிடத்துக்கு மேலாக சாலையில் உலா வந்த ஒற்றை யானை பின்னர் வனப்பகுதிக்குள் தானாகவே சென்றது. அதன் பின்னரே போக்குவரத்து நிலமை சீரானது.