அரவக்குறிச்சி அருகே, போலீசாரிடம் இருந்து தப்பிய தொழிலாளி விபத்தில் சிக்கி பலி

அரவக்குறிச்சி அருகே, போலீசாரிடம் இருந்து தப்பிய தொழிலாளி விபத்தில் சிக்கி பலியானார். மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஓடியபோது, கார் மோதி உயிரிழந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.;

Update: 2022-06-05 18:39 GMT

அரவக்குறிச்சி

கஞ்சா விற்பனை

தேனி மாவட்டம் மயிலாடும்பாறையை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 36). இவர், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வி.எல்லைப்பட்டியில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். விருதலைப்பட்டியில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் அவர் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.தேனி மாவட்டத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு பொன்னுச்சாமி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கூம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை தனிப்பிரிவு ஏட்டு குமாரசாமி, போலீஸ்கார் முத்துக்குமார் ஆகியோர் எல்லைப்பட்டிக்கு சென்றனர். அங்கு பொன்னுச்சாமி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 கிராம் கொண்ட 10 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

தப்பியோட முயற்சி

பின்னர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக பொன்னுச்சாமியை வரும்படி போலீசார் கூறினர். இதையடுத்து பொன்னுச்சாமி தனது மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையம் புறப்பட்டார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் போலீஸ்காரர்கள் குமாரசாமியும், முத்துக்குமாரும் அவரை பின்தொடர்ந்து வந்தனர்.வேடசந்தூர் அருகே காசிபாளையம்-கூம்பூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு அவர்கள் சென்று கொண்டிருந்தனர். பொன்னுச்சாமி மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு முன்னால் சென்றார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் போலீசார் சிறிது இடைவெளி விட்டு பின்னால் சென்றனர்.அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக, கடம்பன்குறிச்சி அருகே திடீரென்று மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு பொன்னுச்சாமி தப்பி ஓட முயன்றார்.

கார் மோதி பலி

அந்த நேரத்தில், எதிரே வந்த கார் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த பொன்னுச்சாமி சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக இறந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த போலீசார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

எல்லை பிரச்சினை

இதற்கிடையே சம்பவம் நடந்த இடம் கூம்பூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டதா? அல்லது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டதா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் விசாரணை நடத்துவதில் போலீசாருக்கு சிக்கல் நீடித்தது.இதனையடுத்து 2 மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறையினர் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட செய்தனர். அதில் ஒரு வழியாக சம்பவம் நடந்த இடம், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்டது என்று முடிவு செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணை

இதனையடுத்து சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் பொன்னுச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் பொன்னுச்சாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரையும், அதனை ஓட்டி வந்த டிரைவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இறந்த பொன்னுச்சாமிக்கு கலையரசி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு கூம்பூர் போலீஸ் நிலையத்தில் போலீசாரால் விசாரணை கைதி அடித்து கொலை செய்யப்பட்டதாக புரளி கிளம்பியது. இதனால் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விடிய, விடிய பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்