ஆண்டிப்பட்டி அருகே கொத்தனார் வீட்டில் செல்போன்கள் திருட்டு:வாலிபர் கைது
ஆண்டிப்பட்டி அருகே கொத்தனார் வீட்டில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
ஆண்டிப்பட்டி அருகே உள்ள மணியக்காரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வையாபுரி (வயது 26). கொத்தனார். நேற்று முன்தினம் இவரும், அவரது மனைவியும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றார். இதற்கிடையே சத்தம் கேட்டதும் வையாபுரி எழுந்து சென்று பார்த்தார். அப்போது அந்த நபர் மேஜையில் இருந்த 2 செல்போன்களை திருடி கொண்டிருந்தார். இதையடுத்து அவரை வையாபுரி கையும், களவுமாக பிடித்தார்.
பின்னர் அவரை ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் வையாபுரி ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், மணியாரம்பட்டி பகுதியை சேர்ந்த அருண் பாண்டி (28) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.