ஆண்டிப்பட்டி அருகேவைகை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முதியவர் உடல் மீட்பு
ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முதியவர் உடல் மீட்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 65). கடந்த 17-ந்தேதி இவர், ஸ்ரீரங்கபுரம் கிராமத்திற்கு அருகே மண்டகத்துறை பகுதியில் வைகை ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் முத்துகிருஷ்ணன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து அவரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நேற்று முன்தினம் வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு தீயணைப்பு துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
அப்போது முதலக்கம்பட்டி பாலத்திற்கு கீழே முத்துகிருஷ்ணனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரது உடலை வைகை அணை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.