ஆண்டிப்பட்டி அருகேமழையால் சேதமடைந்த பகுதியில் எம்.எல்.ஏ ஆய்வு
ஆண்டிப்பட்டி அருகே மழையால் சேதமடைந்த பகுதியில் மகாராஜன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நகரில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததில் கார், மின் கம்பம், வீட்டின் சுவர்கள் இடிந்து சேதமடைந்தது. இதையடுத்து பேரூராட்சி, மின்வாரியம், தீயணைப்புத்துறை பணியாளர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு அதனை சரி செய்தனர்.
இந்தநிலையில் சக்கம்பட்டி பகுதியில் சேதமடைந்த இடங்களை மகாராஜன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார். அதன்படி, திருவள்ளுவர் காலனி, 10-வது வார்டு பகுதி, புதுமேலத்தெரு உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது சேதமடைந்த பகுதிகளை உடனடியாக பழைய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.