ஆண்டிப்பட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோவில் கும்பாபிஷேக விழா
ஆண்டிப்பட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஆண்டிப்பட்டி அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் மாவூற்று வேலப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் கடந்த 2001-ம் ஆண்டுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. இதையடுத்து மாவூற்று வேலப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து 22 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி யாக பூஜைகள் நடத்தப்பட்டு பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா... அரோகரா... என கோஷமிட்டனர். அதன்பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மாவூற்று வேலப்பருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மேலும் கும்பாபிஷேகத்தையொட்டி ஆண்டிப்பட்டியில் இருந்து மாவூற்று வேலப்பர் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நதியா தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழாவில் தெப்பம்பட்டி ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வம், ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.