அந்தியூர் அருகேகடை உரிமையாளர் வீட்டில் திடீர் தீ விபத்து

அந்தியூர் அருகே கடை உரிமையாளர் வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-04-29 21:49 GMT

அந்தியூர்

அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவர் கால் மிதியடி கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மீனா. இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேல் பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள ஒரு கோவில் விழாவையொட்டி நேற்று மதியம் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அப்போது சாமி ஊர்வலமும் நடந்தது. இதனால் சாமி ஊர்வலத்தை சேகர், மீனா மற்றும் அவருடைய குடும்பத்தினர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது சேகரின் வீட்டில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. பின்னர் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. உடனே அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம், 3 பவுன் நகை, கொலுசு, மிக்சி, கிரைண்டர், வாசிங் மெசின் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து சேதம் ஆனது. தீ விபத்தை கண்டதும், மீனா மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்