அந்தியூர் அருகே பவானி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட வாலிபர் உடல் மீட்பு

அந்தியூர் அருகே பவானி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட வாலிபர் உடல் மீட்கப்பட்டது.

Update: 2022-09-18 21:03 GMT

அந்தியூர்

அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதி ஊசிமலை கிராமத்தை சேர்ந்த மாதேஷ். இவருடைய மனைவி ஜெயா. இவர்களுடைய மகன் சசிகுமார் (வயது 23). இவர் சொந்தமாக பொக்லைன் எந்திரம் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அத்தாணி சவுண்டபூர் ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் சசிகுமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கவின் என்பவருடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்கு சசிகுமார் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீச்சல் தெரியாததால் அவர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று சசிகுமாரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் தீயணைப்பு வீரர்கள், ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சசிகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருட்டி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் நேற்று காலையில் மீண்டும் தேடும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் சசிகுமார் குளித்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அவருடைய உடல் மிதந்ததை தீயணைப்பு வீரர்கள் கண்டு மீட்டனர். உடனே போலீசார் சசிகுமாரின் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்