அந்தியூர் அருகே அங்காளம்மன் கோவிலில் தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

அந்தியூர் அருகே உள்ள அங்காளம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-04-21 21:25 GMT

அந்தியூர் அருகே உள்ள அங்காளம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அங்காளம்மன் கோவில்

அந்தியூர் அருகே சந்தியபாளையத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலின் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 7-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவிலில் அங்காளம்மன், நடராஜர், காமாட்சி அம்மன் ஆகிய சாமிகளுக்கு தினமும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது.

தேர்த்திருவிழா

முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி 40 அடி உயரம் கொண்ட மகமேறு தேரில் மலர் அலங்காரத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார்.

பின்னர் சிறிய தேரில் சிம்ம வாகனத்தில் காமாட்சி அம்மன், நடராஜர் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து 2 தேர்களையும் பக்தர்கள் தங்களுடைய ேதாளில் சுமந்தபடி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காவு திடலுக்கு கொண்டு சென்றனர்.

நேர்த்திக்கடன்

அப்போது அங்கு கூடியிருந்த அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவுக்கிடா என்கிற ஆடுகளை காணிக்கையாக கோவிலுக்கு வழங்கினர். பின்னர் அந்த ஆடுகள் பலியிடப்பட்டன.

பின்னர் காவு திடலில் இருந்து தேர் புறப்பட்டு கோவில் வளாகத்தை சென்றடைந்தது. இங்கு பலியிடப்பட்ட ஆடுகளை பக்தர்கள் தங்களுடைய வீடுகளுக்கு கொண்டு செல்லமாட்டார்கள். எனவே பலியிடப்பட்ட ஆடுகளை கொண்டு கறி சமைக்கப்பட்டு கோவில் அருகே பெரிய திடலில் அமைக்கப்பட்டு உள்ள பந்தலில் பக்தர்களுக்கு கிடா விருந்து வழங்கப்பட்டது.

இதையொட்டி அந்தியூர் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்