அந்தியூர் அருகேமின்வேலியில் சிக்கி பலியான காட்டு யானையை புதைத்த விவசாயி
அந்தியூர் அருகே மின்வேலியில் சிக்கி பலியான காட்டு யானையை வனத்துறையினருக்கு தெரியாமல் புதைத்த விவசாயி 10 மாதங்களுக்கு பிறகு சிக்கி உள்ளார்.
அந்தியூர்
அந்தியூர் அருகே மின்வேலியில் சிக்கி பலியான காட்டு யானையை வனத்துறையினருக்கு தெரியாமல் புதைத்த விவசாயி 10 மாதங்களுக்கு பிறகு சிக்கி உள்ளார்.
பர்கூர் மலைப்பகுதி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களிலும் ஏராளமான யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் காணப்படுகின்றன. இதன்படி அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியிலும் யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு தேடி அடிக்கடி விவசாய நிலத்துக்குள் வருகின்றன. இதனால் பயிர்கள் சேதம் அடைகின்றன.
யானைகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் சிலர் சட்டவிரோதமாக மின் வேலிகள் அமைக்கிறார்கள். இதனால் மின் வேலியில் சிக்கி யானைகள் இறந்து விடுவதுண்டு. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்வார்கள். ஆனால் மின் வேலியில் சிக்கி பலியான யானையை வனத்துறையினருக்கு தெரியாமல் புதைத்த சம்பவம் பர்கூர் மலைப்பகுதியில் நடந்து உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
யானையின் உடல் பாகங்கள்...
அந்தியூர் பர்கூர் வனப்பகுதியில் கோவில்நத்தம் பகுதியில் விவசாயி ஒருவர் அமைத்த மின் வேலியில் சிக்கி யானை ஒன்று இறந்து உள்ளதாக பர்கூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் வனச்சரகர் பிரகாஷ் தலைமையில் வனத்துறையினர் கோவில்நத்தம் பகுதிக்கு சென்று அங்குள்ள ஒரு புறம்போக்கு நிலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அங்குள்ள ஒரு இடம் சந்தேகத்திற்கிடமாக மேடாக காணப்பட்டது. இதனால் அந்த இடத்தில் பொக்லைன் எந்திரம் கொண்டு தோண்டினர். அப்போது யானையின் உடல் பாகங்கள் எலும்புக்கூடுகளாக கிடைத்தன. அதை வெளியே எடுத்து வனத்துறை அதிகாரிகள் சேகரித்தனர். உடனே இதுகுறித்து ஈரோடு மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ் பிரபுவுக்கு, பர்கூர் வனத்துறையினர் தகவல் ெதரிவித்தனர்.
கைது
மேலும் இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த விவசாயியான சடையப்பன் (வயது 58) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் வனத்துறையினரிடம் கூறுகையில், 'கடந்த 10 மாதங்களுக்கு முன்பு என்னுடைய 5 ஏக்கர் நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், சோளம் ஆகியவற்றை பயிரிட்டு இருந்தேன். வனவிலங்குகளால் இந்த பயிர்கள் சேதப்படுத்தப்படாமல் இருக்க விவசாய நிலத்தை சுற்றிலும் மின் வேலி அமைத்திருந்தேன். அப்போது அங்கு வந்த காட்டு யானை, மின் வேலியில் சிக்கி இறந்தது. இதனால் பயந்துபோன நான் வனத்துறைக்கு தெரியாமல் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி புதைத்துவிட்டேன்,' என்றார். இதைத்தொடர்ந்து சடையப்பனை வனத்துறையினர் கைது செய்தனர்.
ரசாயன பரிசோதனை
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கைப்பற்றப்பட்ட 'யானையின் எலும்புக்கூடுகள் ரசாயன பரிசோதனைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சோதனைக்கு பின்னர் தான் அது ஆண் யானையா? பெண் யானையா? யானையின் வயது என்ன? போன்ற விவரங்கள் தெரியவரும்,' என்றனர்.
கைது செய்யப்பட்ட சடையப்பன், பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.