அந்தியூர் அருகேபோதை ஊசி பயன்படுத்திய 5 பேர் கைது2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

அந்தியூர் அருகே போதை ஊசி பயன்படுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனா் மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனா்

Update: 2023-07-20 21:08 GMT

அந்தியூர் அருகே போதை ஊசி பயன்படுத்தியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

5 பேர் பிடிபட்டனர்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சந்தியபாளையம் பிரிவில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 7 பேர் அங்கு தெருவிளக்கின் அடியில் அமர்ந்து கொண்டு ஊசி போட்டுக் கொண்டிருந்தனர்.

போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து ஓடினார்கள். இதனால் போலீசார் அவர்களை துரத்தி சென்றனர். இதில் 5 பேரை மடக்கி பிடிபட்டனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட 5 பேரும் போதையில் இருந்தனர். இதனால் போதை தெளிந்த பின்பு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

போதை மருந்து

விசாரணையில், அவர்கள் அந்தியூர் அருகே உள்ள சந்தியப்பாளையம் பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன் (வயது 20), செம்புளிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்த மகாதேவன் (23), தோட்டக்குடியாம்பாளையம் பகுதியை சேர்ந்த பூபதி (22), தவுட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் (24), வெங்கடேஸ்வரன் (22) என்பதும், தப்பி ஓடியவர்கள் சிந்தகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பாலாஜி மற்றும் திருமூர்த்தி என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் மும்பையில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு கூரியர் சர்வீஸ் மூலம் 35 ஆயிரம் ரூபாய்க்கு போதை மாத்திரையை வாங்கி உள்ளனர். பின்னர் அவற்றை தண்ணீரில் கரைய வைத்து சிகரெட் பஞ்சு மூலம் வடிகட்டி கரைசலை ஊசி மூலம் தங்கள் உடலில் செலுத்தி போதை ஏற்றியுள்ளனர். இதுதவிர வாலிபர்களிடம் ரூ.250 பெற்றுக் கொண்டு அவர்களுக்கும் போதை மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி வந்ததாக தெரிவித்தனர்.

கைது

இதைத்தொடர்ந்து போதை மருந்துகளை பயன்படுத்தியதாக அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு ஊசி மூலம் போதை மருந்து செலுத்தியதற்காக பெற்ற தொகை ரூ.21 ஆயிரத்து 600-ம், ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 750 மதிப்புள்ள போதை மருந்து ஊசிகளும் மற்றும் 3 செல்போன்கள், 2 மோட்டார்சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதே பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு போதை மருந்து பயன்படுத்தியதாக 7 வாலிபர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்