அம்மாபேட்டை அருகே லாரி மோதி 2 வாலிபர்கள் பலி: ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய போது பரிதாபம்

அம்மாபேட்டை அருகே லாரி மோதி 2 வாலிபர்கள் பலியானாா்கள்

Update: 2023-06-23 21:36 GMT

அம்மாபேட்டை அருகே ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது லாரி மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுற்றுலா சென்றனர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வளையபாளையத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன். அவருடைய மகன் கருப்புசாமி (வயது 23). பி.பி.ஏ. படித்த இவர் மளிகை கடை நடத்தி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஞானவேல் மகன் ராமர் (19). எலக்ட்ரீசியன். உறவினர்களான இவர்கள் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் தங்களின் உறவினர்கள் சிலரை அழைத்துக்கொண்டு மொத்தம் 3 மோட்டார் சைக்கிள்களில் நேற்று அதிகாலை ஒகேனக்கல் சென்றனர்.

பின்னர் ஒகேனக்கல்லை சுற்றி பார்த்துவிட்டு அவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூர் சென்றனர். அங்கு அணை பூங்காவை சுற்றி பார்த்தனர். அதன்பின்னர் மாலையில் அங்கிருந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். ஒரு மோட்டார்சைக்கிளில் கருப்புசாமி, ராமர் சென்றனர். இதில் மோட்டார்சைக்கிளை கருப்புசாமி ஓட்டினார். அவருக்கு பின்னால் ராமர் அமர்ந்திருந்தார். அவர்களுக்கு பின்னால் மற்ற 2 மோட்டார்சைக்கிள்களில் உறவினர்கள் வந்து கொண்டிருந்தனர்.

2 வாலிபர்கள் பலி

மேட்டூர்-பவானி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அம்மாபேட்டை சின்னப்பள்ளம் அருகே சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அந்த வழியாக கருப்புசாமியும், ராமசாமியும் மோட்டார்சைக்கிளில் சென்றபோது மேட்டூரில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற தனியார் பஸ்சின் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதனால் கருப்புசாமி மோட்டார்சைக்கிளை நிறுத்த முயன்றார்.

அப்போது அதே வழித்தடத்தில் குஜராத்தில் இருந்து கோவை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு பஸ்சின் பின்பகுதியில் மோதியது. இந்த விபத்தில் பஸ் நிலைதடுமாறி ரோட்டோர புளிய மரத்தில் மோதி நின்றது. இதில் கருப்புசாமியும், ராமரும் கீழே விழுந்து லாரியின் அடியில் சிக்கிக்ெகாண்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ் பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

டிரைவர் கைது

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தால் மேட்டூர்-பவானி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவரான சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த வெங்கடேசன் (48) என்பவரை கைது செய்தனர்.

சுற்றுலா சென்றுவிட்டு் திரும்பிய 2 வாலிபர்கள் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்