மாமல்லபுரம் நட்சத்திர ஓட்டலில் இன்று நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்

மாமல்லபுரம் நட்சத்திர ஓட்டலில் கண்ணாடி மாளிகையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடக்கிறது. திருமண நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் உரிமை ரூ.25 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

Update: 2022-06-09 00:15 GMT

சென்னை,

நடிகை நயன்தாரா-டைரக்டர் விக்னேஷ் சிவன் 6 வருடங்களாக காதலித்து இப்போது திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். இவர்கள் திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று (வியாழக்கிழமை) காலை நடக்கிறது.

அங்கு திருமணத்துக்காக பிரத்யேகமாக விசேஷ கண்ணாடி மாளிகை போன்று அரங்கு அமைத்துள்ளனர். ஓட்டலில் விருந்தினர்களுக்காக அதிக அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.

திருமண விழாவையொட்டி விக்‌னேஷ் சிவனின் சகோதரிக்கு நயன்தாரா 30 பவுன் தங்க நகை வாங்கி பரிசளித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரது நெருங்கிய உறவினர்கள் அனைவருக்கும் தனித்தனியாக பரிசு பொருட்கள் வழங்கி இருக்கிறார்.

ரூ.25 கோடி

திருமண நிகழ்ச்சிகள் நேற்று முன்தினத்தில் இருந்து மெஹந்தி சடங்குகளுடன் தொடங்கின. இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 100 பேர் கலந்துகொண்டார்கள். அவர்களுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

திருமண நிகழ்ச்சியை தனியார் ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பும் உரிமையை ரூ.25 கோடிக்கு விற்று இருப்பதாக கூறப்படுகிறது. எனவே திருமணத்தை நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை உள்ளடக்கி ஒரு சினிமா போல் படமாக்கி தரும் பொறுப்பை டைரக்டர் கவுதம் மேனனிடம் ஒப்படைத்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது.

இதனால் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியில் கசிந்து விடாமல் இருக்க திருமணத்தில் பங்கேற்க வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

கட்டுப்பாடுகள்

திருமணம் நடக்கும் அரங்குக்குள் செல்போன் கொண்டு வரவும் புகைப்படம் எடுக்கவும் தடை விதித்துள்ளனர். அழைப்பிதழ் வைத்து இருப்பவர்களை மட்டும் உள்ளே அனுமதிக்க வாயிலில் தனியார் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். இந்தி நடிகை கத்ரினா கைப் திருமணத்தை தனியார் நிறுவனம் பொறுப்பேற்று நடத்தியது போல் நயன்தாரா திருமண ஏற்பாடுகளையும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து உள்ளனர். அவர்கள் விருந்தினர்கள் பட்டியலை கையில் வைத்து அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பது உள்பட அனைத்து பணிகளையும் கவனித்து வருகிறார்கள்.

போலீஸ் பாதுகாப்பு

நயன்தாரா, விக்னேஷ்சிவன் தரப்பில் திருமணத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டும் மனு அளிக்கபட்டு உள்ளது. இதையடுத்து ஓட்டலுக்கு வெளியே போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகிறார்கள். திருமணம் இந்து முறைப்படி நடக்கிறது. திருமணத்தில் நடிகர் நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட 200 பேர் பங்கேற்கிறார்கள். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி, சிரஞ்சீவி, இந்தி நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து உள்ளனர். அவர்கள் திருமணத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமண பரிசு

இந்தநிலையில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு நாளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தும் பொறுப்பை விக்னேஷ் சிவனிடம் தமிழக அரசு ஒப்படைத்து உள்ளது. இதை தனது திருமண பரிசாக கருதுவதாக விக்னேஷ் சிவன் தெரிவித்து உள்ளார். கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ள இடத்தை திருமண வேலைக்கு இடையிலும் அரசு அதிகாரிகளுடன் நேற்று விக்னேஷ் சிவன் பார்வையிட்டார்.

16 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு

திருமணத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள 16 ஆயிரம் குழந்தைகளுக்கு இன்று இலவசமாக மதிய உணவு வழங்க நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் ஏற்பாடு செய்துள்ளனர்.

விக்னேஷ் சிவனின் சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள லால்குடி. அங்குள்ள உறவினர்கள் பலர் பரிசு பொருட்கள் வாங்கி வைத்து திருமணத்துக்கு செல்ல ஆர்வமாக இருந்ததாகவும் ஆனால் விக்னேஷ் சிவன் அழைப்பிதழ் தரவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்