"தி.மு.க.வுடன் கூட்டணி சேர வாய்ப்பு இல்லை"-நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேட்டி

அண்ணாமலை நடைபயணம் வெற்றி பெறும் என்றும், “தி.மு.க.வுடன் கூட்டணி சேர வாய்ப்பு இல்லை” என்றும் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2022-12-22 20:47 GMT

நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், பாரதீய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன், தனது தொகுதி மேம்பாட்டு பணிகளுக்காகவும், நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் விஷ்ணுவை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருநெல்வேலி கால்வாய் ரூ.15 கோடியில், கோடகன் கால்வாய் ரூ.38 கோடியில் தூர்வாரி, கால்வாய்களில் சிமெண்டு லைனிங் அமைப்பது தொடர்பாக கலெக்டரிடம் பேசி உள்ளேன்.

கங்கைகொண்டானை அடுத்த அலவந்தான்குளம் முதல் ராஜபதி கிராமம் வரை 8-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மேய்ச்சல் நிலமாக இருக்கக்கூடிய 600 ஏக்கரை சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்காக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மக்கள் போராடி வருகின்றனர். எனவே அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பாரதீய ஜனதா கட்சி தற்போது வரை அ.தி.மு.க. கூட்டணியிலேயே நீடிக்கிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி சேருகிறோமா? என்பது குறித்து எங்களது கட்சி நாடாளுமன்ற குழு கூடி முடிவு செய்யும். எனினும் தி.மு.க.வுடன் கூட்டணி சேர வாய்ப்பு இல்லை.

விரைவில் மாநில தலைவர் அண்ணாமலை தொடங்க இருக்கும் பாத யாத்திரை வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்