நவராத்திரி விழாவுக்கு 3 நாள் அனுமதி வழங்கிய நிலையில் திடீர் தடை

நவராத்திரி விழாவுக்கு 3 நாள் அனுமதி வழங்கிய நிலையில் திடீர் தடை விதிக்கப்பட்டது.

Update: 2023-10-22 20:05 GMT

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.

நவராத்திரி தினங்களில் சதுரகிரி மலையில் அமைந்துள்ள ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் 10 நாட்கள் நவராத்திரி உற்சவ விழா ஏழுர் சாலியர் சமுதாயத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த வருடத்திற்கான நவராத்திரி உற்சவம் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து அந்த சமுதாயத்தின் சார்பில் 10 நாட்களும் நவராத்திரியை முன்னிட்டு மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கேட்டனர்.ஆனால் வனத்துறையினர் நவராத்திரி விழாவில் கடைசி 3 தினங்களான 22, 23, 24, ஆகிய நாட்களுக்கு மட்டும் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கினர்.

அனுமதிக்கப்பட்ட இந்த 3 நாட்களில் மலையில் தங்க அனுமதிக்கக்கோரி வனத்துறையிடம் ஏழுர் சாலியர் சமுதாயத்தின் சார்பில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு வனத்துறை அனுமதி மறுத்த நிலையில், அனுமதி கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு தற்போது ஐகோர்ட்டு விசாரணையில் நிலுவையில் உள்ளது. இதனால் ஏற்கனவே 3 நாட்களுக்கு வழங்கிய அனுமதியை மாவட்ட வனத்துறை திடீரென ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை அறியாமல் சதுரகிரி கோவிலுக்கு செல்ல நேற்று ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்களை வத்திராயிருப்பு, தாணிப்பாறை விலக்கு, மகாராஜபுரம் விலக்கு ஆகிய பகுதிகளில் போலீசார் தடுத்து நிறுத்தினர். சதுரகிரி அடிவாரப்பகுதியான தாணிப்பாறையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலுக்கு செல்ல அனுமதிக்க முடியாது என வனத்துறை சார்பில் திட்டவட்டமாக கூறியதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்