பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா

பழனி முருகன் கோவில் மற்றும் உபகோவில்களில் நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் நேற்று தொடங்கியது.

Update: 2022-09-26 19:00 GMT

பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா நேற்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக கோவில்கள் சுத்தம் செய்யப்பட்டன. பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் விநாயகர் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலசந்தி பூஜையில் சிவன், நடராஜர், சிவகாமி அம்மன், சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கும், கோவில் யானை கஸ்தூரிக்கும் காப்புக்கட்டு நடைபெற்றது.

இதேபோல் திருஆவினன்குடி கோவில், மலைக்கோவிலில் உச்சிக்கால பூஜையில் விநாயகர், மூலவர், சின்னக்குமாரர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், நவவீரர்கள் ஆகியோருக்கு காப்புக்கட்டு நடைபெற்றது. முன்னதாக சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

கலை நிகழ்ச்சிகள்

நவராத்திரி விழாவின் 9-ம் நாளான அடுத்த மாதம் 4-ந்தேதி பழனி முருகன் கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. பின்னர் மாலை 3 மணிக்கு பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அங்கிருந்து முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் சென்று, வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் முத்துக்குமாரசுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வருதல், அர்த்தசாம பூஜை நடைபெற்று பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்