பள்ளி மாணவர்களுக்கு இயற்கை கல்வி சுற்றுலா

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஒரு நாள் இயற்கை கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

Update: 2023-01-24 18:45 GMT

ஊட்டி, 

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஒரு நாள் இயற்கை கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

இயற்கை கல்வி சுற்றுலா

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் ஒரு நாள் இயற்கை கல்வி சுற்றுலா அழைத்து செல்ல திட்டுமிடப்பட்டது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 20 பள்ளிக்கூடங்களில் சிறு போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் இயற்கை கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

நேற்று முன்தினம் ஊட்டி அருகே சூழல் சுற்றுலா தலமான கேர்ன்ஹில் வனப்பகுதி மற்றும் எம்.பாலாடாவில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மரக்கன்றுகள், ஆர்க்கிட் செடிகள், தாவரங்களை பார்வையிட்டனர். அப்போது பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வனப்பகுதியில் நடை பயிற்சி, பட்டாம்பூச்சி, பல்வேறு பறவைகள், தாவரங்களை கண்டறிதல், தியானம், பழங்குடியினர் பாரம்பரிய அறிவு குறித்து கற்பிக்கப்பட்டது.

தாவரங்கள் பாதுகாப்பு

இதில் தேசிய பசுமை படையின் குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் கலந்துகொண்டு பேசுகையில், இதுபோன்ற வாய்ப்புகள் மூலம் இயற்கையான அறிவை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு மிக பயனுள்ளதாக அமையும். இந்த இயற்கை களப்பயணம் நீலகிரி உயிர்ச்சூழலின் முக்கியத்துவத்துவத்தை அறிந்து கொள்ளவும், அங்கு வாழும் பழங்குடியின மக்களின் பாரம்பரிய அறிவு, நீலகிரிக்கே உரித்தான தாவரங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ள உதவும் என்றார்.

தொடர்ந்து வனவர் மேகர் நிஷா பேசும்போது, பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீசி எறிவதையும், வனவிலங்குகளுக்கு உணவு அளிப்பதையும் தவிர்க்க வேண்டும். அதிக பூச்சிக்கொல்லி மருந்துகளால் சோலை வனப்பகுதிகளும், மூலிகை மற்றும் அரிய தாவரங்களும் அழிந்து வரும் அபாயத்தில் உள்ளது என்றார். சுற்றுச்சூழல் ஆர்வலர் குமரவேலு, நீலகிரி மாவட்ட இயற்கை விவசாய சங்க செயலாளர் ராமதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து விளக்கம் அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்