இயற்கை வேளாண்மை குறித்து தேசிய கருத்தரங்கம்

ஊட்டியில் இயற்கை வேளாண்மை குறித்து தேசிய கருத்தரங்கம் நடந்தது. இதில் விஞ்ஞானிகள், விவசாயிகள் கலந்துரையாடினர்.

Update: 2022-07-23 13:48 GMT

ஊட்டி, 

ஊட்டியில் இயற்கை வேளாண்மை குறித்து தேசிய கருத்தரங்கம் நடந்தது. இதில் விஞ்ஞானிகள், விவசாயிகள் கலந்துரையாடினர்.

தேசிய கருத்தரங்கம்

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இயற்கை மற்றும் நீடித்த வேளாண் மையம் சார்பில், பருவநிலை சார்ந்த இயற்கை பண்ணையம் மற்றும் நீடித்த வேளாண்மை என்ற தலைப்பில் ஊட்டியில் 2 நாட்கள் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராம கதிரேசன் தலைமை தாங்கினார்.

மண் மற்றும் நீர் பாதுகாப்பு மைய இயக்குனர் எம்.மது பேசினார். இதில் பெங்களூரு இயற்கை வேளாண் மைய மண்டல இயக்குனர் த.ரவீந்திர குமார், கொல்கத்தா இந்திய புவியியல் மற்றும் அளவை மைய முன்னாள் இணை பொது இயக்குனர் ஜெயபாலன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.

கலந்துரையாடல்

இந்த கருத்தரங்கில் நாடு முழுவதிலும் இருந்து இயற்கை வேளாண் சார்ந்த தலைப்புகளில் பல்வேறு விஞ்ஞானிகள் கலந்துகொண்டு பேசினர். மேலும் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேளாண் அறிவியல் நிலையங்கள் மூலம் இணைய வழியிலும் ஊட்டியை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் 50 பேர் கலந்துகொண்டு விஞ்ஞானிகளுடன் தங்களது இயற்கை வேளாண் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மைய பேராசிரியர் கண்ணன், இயற்கை மற்றும் நீடித்த வேளாண்மை மையத்தின் இயக்குனர் ராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் விவசாயிகள் இயற்கை வேளாண் பண்ணையையும் நேரடியாக பார்வையிட்டனர். அவர்களுக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்