தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழா தொடக்க நிகழ்ச்சிகளை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-02 13:37 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழா தொடக்க நிகழ்ச்சிகளை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

ஊட்டச்சத்து மாத திருவிழா

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழா தொடக்க நிகழ்ச்சி இன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உணவு கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலெக்டர் தலைமையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு உறுதி மொழியினை ஏற்று கொண்டனர்.

பின்னர் ஊட்டச்சத்து விழிப்புணர்வு, ரத்த சோகை விழிப்புணர்வு குறித்த பிரசார வாகனத்தில் ஒளிபரப்பப்படும் விழிப்புணர்வு படத்தை பார்வையிட்டு அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2,127 அங்கன்வாடி மையங்களிலும் தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழா வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் கைகழுவுதல், ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு வினாடி-வினா நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவு திருவிழா, காய்கறி தோட்டம் அமைத்தல் ஆகியவை நடத்தப்பட உள்ளது.

கல்லூரி மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

ஒரு மாதம் நடைபெறும் இந்த ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழாவில் அனைத்து துறைகளும் கலந்து கெண்டு "ஊட்டச்சத்து மாத விழாவில் ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல்" என்ற கருத்தை வலியுறுத்தி ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத கிராமங்களாக திருவண்ணாமலை மாவட்டம் உருவாக்கிடும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட திட்ட அலுவலர் கந்தன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செல்வக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு செயலர் அறவாழி மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்