பள்ளிகள்-கல்லூரிகளில் தேசியக்கொடியேற்றி கொண்டாட்டம்

பள்ளிகள்-கல்லூரிகளில் தேசியக்கொடியேற்றி கொண்டாடப்பட்டது.;

Update: 2023-08-15 22:02 GMT

சுதந்திர தின விழா

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில், பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் தேசியக்கொடி ஏற்றி வைத்து பேசினார். அவர் பேசுகையில், 'தேசமே முதன்மையானது, எப்போதும் முதன்மையானது' என்ற கருத்தை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவும், பொறுப்பான குடிமகன்களாக இருக்க வேண்டும் என்று கூறியதோடு, சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார். இதையடுத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் சி.கே.ரஞ்சன், திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை முதல்வர் சேகர், சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் துளசி, செவிலியர் கல்லூரி முதல்வர் பேச்சியம்மாள், பொறியியல் கல்லூரி முதல்வர் சஞ்சய் சிங், வேளாண்மை கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், தேர்வு நெறியாளர் பிரகாஷ், பொறியியல் கல்லூரி துணை முதல்வர் ராஜூ, அலிட் ஹெல்த் சயின்ஸ் கல்லூரி துணை முதல்வர் ரேகா, மாணவர்கள் நலப்பிரிவின் துணை முதல்வர் ரவிச்சந்திரன், டாக்டர் பத்மா, உடற்கல்வி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்வி நிறுவனங்கள்

இந்திரா கணேசன் கல்வி நிறுவனத்தில் நடந்த விழாவில் பதிவாளர் டாக்டர் எம்.அனுசியா வரவேற்றார். லலிதா நர்சிங் ஹோம், ஷமளா நர்சிங் ஹோம் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.சித்ரா தேசியக்கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினர்களாக அந்த நர்சிங் ஹோமின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.சித்ரா, போலீஸ் துணை சூப்பிரண்டு டி.ஆர்.என்.ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இந்திரா கணேசன் கல்வி குழுமத்தின் முதல்வரும், இயக்குனருமான டாக்டர் க.பாலகிருஷ்ணன் சிறப்பு செய்தார்.

இதைத்தொடர்ந்து கல்வி குழுமத்தை சேர்ந்த அனைத்து துறை மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் பிசியோதெரபி மாணவர்கள் முதலிடமும், நர்சிங் துறை மாணவர்கள் இரண்டாம் இடமும், பொறியியல் துறை மாணவர்களுக்கு மூன்றாம் இடமும் பிடித்தனர். அவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களால் பரிசு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்றன. இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியின் துணை முதல்வரான டாக்டர் எஸ்.கார்த்திகேயன் நன்றி கூறினார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பல்கலை பேரூர் வளாகத்தில் துணைவேந்தர் செல்வம் தேசியக் கொடியேற்றி வைத்து பேசினார். மேலும் கர்நாடகா குவெம்பு பல்கலைக்கழகத்தில் நடந்த தேசிய ஒருங்கிணைப்பு முகாமில் கலந்து கொண்ட 10 மாணவர்களுக்கும், சென்னை கிரசன்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு முகாமில் கலந்து கொண்ட 10 மாணவர்களுக்கும் சான்றிதழ்கள், போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் 3 மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் சுதந்திர தின அணிவகுப்பு தேர்வு முகாம் உத்திரபிரதேசம் மற்றும் ஜான்சியில் நடைபெற்ற முகாம், கும்பகோணத்தில் நடைபெற்ற தல் சைனிக் முகாம், ராணுவ படை ஒருங்கிணைப்பு முகாம் ஆகியவற்றில் பங்கேற்ற 17 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். விழாவில் ஆட்சிக்குழு உறுப்பினர் பாபு ராஜேந்திரன், பதிவாளர் கணேசன், தேர்வாணையர் சீனிவாசராகவன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் லெட்சுமிபிரபா, தேசிய மாணவர் படை பொறுப்பாளர் காசிநாதன், தொலைநிலை கல்வி மைய இயக்குனர் தாமரைச்செல்வி, உடற்கல்வித்துறை தலைவர் காளிதாசன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் பதிவாளர் கணேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் ஜெரால்டு செய்திருந்தார். மண்ணச்சநல்லூரை அடுத்த ராசாம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சரவணபவ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி முதல்வர் அனிதா தலைமை தாங்கினார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழாய்வுத்துறை நெறியாளர் பேராசிரியர் ஜோதிலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக்கொடியேற்றி, தேச தலைவர்களை போன்று வேடம் அணிந்து வந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து என்.எஸ்.எஸ்., ஜே.ஆர்.சி. மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

துறையூர்

துறையூர் அருகே உள்ள கோவிந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை ரோஸ்லின்சுகுணா முன்னிலை வகித்தார். துறையூர் வட்டார கல்வி அலுவலர் மார்ட்டின் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாணவர்கள் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரிடமும் சமமாக பழக வேண்டும், என்றார். இதில் ஆசிரியர்கள் ஹேமமாலினி, செல்வகுமார், சசிகுமார், சுதா, ரேவதி மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

புள்ளம்பாடி

புள்ளம்பாடி ஒன்றியத்தில் பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் கல்லக்குடியில் உள்ள டால்மியா மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் முன்னிலையில் டால்மியா சிமெண்டு ஆலை தலைவர் விநாயகமூர்த்தி தேசியக்கொடி ஏற்றி பேசினார். இதில் ஆலை துணை பொதுமேலாளர்கள் சுப்பையா, ரமேஷ்பாபு, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதேபோல், புள்ளம்பாடி பாரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முதல்வர் மகேஸ்வரி முன்னிலையில் தாளாளர் பார்க்கவன்.பச்சமுத்து கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

இ.வெள்ளனூரில் உள்ள வெற்றி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியர் பிருந்தாவன் தேசியக்கொடி ஏற்றினார். இதேபோல், இ.வெள்ளனூரில் இயங்கி வரும் நவபாரத் வித்யாலயா சீனியர் செகண்டரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முதல்வர் அருணா முன்னிலையில் பள்ளி தாளாளரும், மாவட்ட முன்னாள் பள்ளிக்கல்வி அலுவலருமான முத்துகிருஷ்ணன் தேசியக்கொடி ஏற்றினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

என்.ஐ.டி.

திருச்சி இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.ஐ.டி.) நடந்த விழாவில் ஐ.ஐ.ஐ.டி. இயக்குனர் சர்மா தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். விழாவில் பதிவாளர் (பொறுப்பு) சீதாராமன், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் என்.ஐ.டி.யில் நடந்த விழாவில் இயக்குனர் அகிலா தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்