தேசிய கல்வி கொள்கை: 'இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற உதவும்' கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன், கவர்னர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார். அப்போது 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா முழு வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கு தேசிய கல்வி கொள்கை உதவும் என்று பேசினார்.

Update: 2023-07-21 18:54 GMT

சென்னை,

தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன், கவர்னர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தும் நிகழ்வு சென்னை கிண்டி கவர்னர் மாளிகை வளாகத்தில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இதில் எஸ்.ஆர்.எம். உள்பட தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

இந்திய சுதந்திரத்துக்கு பிறகு கொண்டுவரப்பட்ட மற்றொரு கல்வி கொள்கைதான், தேசிய கல்வி கொள்கை. இது நம்முடைய இளைஞர்களின் திறமைகள், திறன்களை உணருவதற்கு உதவுவதோடு, உயர்கல்விக்கான முழுமையான அணுகுமுறையை இந்த கல்வி கொள்கை வழங்குகிறது. 2047-ம் ஆண்டுக்குள் இந்திய முழு வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கும் இது உதவும்.

ஊக்குவிக்கும் நோக்கம்

இன்றைய மற்றும் வரக்கூடிய சவால்களை இளைய தலைமுறையினர் எதிர்கொள்வதற்கு நவீன தொழில்நுட்ப திறன்கள் மற்றும் அறிவை வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கான தேவையான தன்னம்பிக்கையையும் கொடுக்கும். தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. கல்வியாளர்களுக்கும், தொழில் துறையினருக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது அவசியம்.

வேலையில்லா திண்டாட்டத்தையும், அதன் சவால்களையும் போக்க, கல்வி அறிவுக்கும், தேவையான தொழில்துறை திறன்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை சரிசெய்யவேண்டும்.

தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க தொழில்நுட்ப பாடங்கள் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்படுவதற்கு ஏதுவாக மொழி பெயர்ப்பாளர்கள், கல்வியாளர்கள் தங்களுடைய வளங்களை செலவிட வேண்டும். தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தை தேசிய கல்வி கொள்கை கொண்டுள்ளது.

மாணவர்கள் ஆய்வு

சுதந்திர போராட்டத்தில் தமிழ்நாடு தன்னுடைய பங்கை அதிகம் அளித்துள்ளது. அதில் பலரை பற்றிய புகழ் வெளிப்படவில்லை. அதனை அடையாளம் கண்டு, அவர்களின் வாழ்க்கை, தியாகம் ஆகியவற்றை மாணவர்கள் ஆய்வு செய்து, வருங்கால சந்ததியினருக்கும் தெரியும் வகையில் அதனை ஆவணப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு அரசு தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் கவர்னர் ஆர்.என்.ரவி ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்