தேசிய பேரிடர் மீட்பு படையினர் சிதம்பரத்தில் முகாம்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் சிதம்பரத்தில் முகாமிட்டுள்ளனர். கூடுதலாக தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 40 பேர் கடலூர் வந்தனர்.

Update: 2022-12-07 19:41 GMT

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. மேலும் இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று புயலாக மாறி வந்தது.

இதையொட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 3 நாட்களுக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புஉள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சிதம்பரத்தில் முகாம்

அதன்படி கடலூர் மாவட்டத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் அரக்கோணத்தில் இருந்து கமாண்டர் குல்ஜிந்தர்மூன் தலைமையில் 28 தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்தனர். அவர்கள் கடலூர் குடிகாட்டில் உள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று இந்த படையினர் 30 பேர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சுற்றுலா மாளிகைக்கு சென்று தங்கினர். தொடர்ந்து அவர்கள் சிதம்பரத்தில் முகாமிட்டு மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் போது, பாதிக்கப்படும் இடங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

40 பேர் வருகை

இதேபோல் சென்னையில் இருந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 40 பேர் நேற்று கடலூர் வந்தனர். தொடர்ந்து அவர்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் இன்று (வியாழக்கிழமை) மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் கேட்ட போது, சென்னையில் இருந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 40 பேர் கடலூர் வந்தனர்.அவர்கள் உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபடுவார்கள். ஏற்கனவே அவர்கள் வந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய இடங்களை கண்டறிந்து சென்று விட்டனர். இதனால் பாதிக்கப்படும் இடங்களுக்கு எளிதாக சென்று மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்கள் தங்கள் படகுகளை துறைமுகத்திலும், கடற்கரையோரங்களிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்