அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தேசிய ஆணைய குழு ஆய்வு

கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தேசிய ஆணையக் குழுவினர் ஆய்வு நடத்தினர்.

Update: 2023-05-18 18:45 GMT

நாகர்கோவில், 

கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தேசிய ஆணையக் குழுவினர் ஆய்வு நடத்தினர்.

ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி

நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆஸ்பத்திரியில் பொது மருத்துவம், காது, மூக்கு தொண்டை பிரிவு, குழந்தைகள் பிரிவு, பெண்கள் பிரிவு, கண் சிகிச்சை, தைராய்டு, கிட்னி கல் மற்றும் உடல் எடை குறைப்பு, பஞ்சகர்மா போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

தற்போது ஆயுர்வேத முறை சிகிச்சையை பொதுமக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இதனால் வெளி மாவட்டத்தில் இருந்தும் நோயாளிகள் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.

தேசிய ஆணைக்குழு ஆய்வு

இந்தநிலையில் இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணைய குழுவைச் சேர்ந்த ஸ்ரீனி வாசலு மற்றும் மாயாங் மிஸ்ரா ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்து ஆய்வு நடத்தினர்.

மாணவர் சேர்க்கை தொடர்பாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் ஆயுர்வேத ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, உள் நோயாளிகள் பிரிவு, மருந்து கிடங்கு, ஆய்வகம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கழிவறை வசதி, குடிநீர் வசதி, படுக்கை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

மருந்து தயாரிக்கும் கூடம்

மேலும் வகுப்பறைகள், பேராசிரியர்கள் எண்ணிக்கை, மருந்து தயாரிக்கும் கூடம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர். இதுபற்றி டாக்டர்களிடம் கேட்டபோது, "ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடர்பாக மத்திய குழு ஆண்டுதோறும் ஆய்வு நடத்துவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் ஆய்வு நடத்துகிறார்கள்" என்றனர். இந்த ஆய்வானது இன்று (வெள்ளிக்கிழமை) 2-வது நாளாக நடக்கிறது. ஆய்வின்போது ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மேனகா தேவி மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்