தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
கூடலூர் அரசு பள்ளியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. இதில் 172 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.
கூடலூர்
கூடலூர் அரசு பள்ளியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. இதில் 172 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.
அறிவியல் மாநாடு
நீலகிரி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். கூடலூர் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் தொடங்கி வைத்தார். போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார், கூடலூர் அரசு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவாசகம் வரவேற்றார்.
மாநாட்டில் 42 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவர்கள் 344 பேர் கலந்து கொண்டு 172 ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கட்டுரைகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் 20 கட்டுரைகள் மாநில அளவிலான மாநாட்டில் சமர்ப்பிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டது.
நினைவு பரிசு
இதில் காணாமல் போன பச்சை கம்பளம், தேயிலை தொழிலாளர்களின் இன்றைய நிலை-அவர்களின் உடல் நலன், மறு குடியமர்வும்-மக்கள் வாழ்வும், நிலச்சரிவு, பழங்குடியினரின் உணவு முறை, சூழ்நிலை மண்டலம் மனித-வனவிலங்கு மோதல் உள்பட 20 கட்டுரைகள் அடங்கும். தொடர்ந்து மாநில அளவிலான மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் முகமது பாஷா கலந்து கொண்டு மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் பதக்கம் வழங்கினார். மேலும் மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கு நினைவு பரிசுகள், இளம் விஞ்ஞானிகள் என்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் ராஜூ, கவிதா, செந்தில்குமாரி, துளிர் திறன் திறனாய்வு தேர்வு ஒருங்கிணைப்பாளர் சணல் குமார் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.