மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி -மதுரை வீரர், வீராங்கனைகள் பதக்கம் வென்று சாதனை

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டியில் மதுரை வீரர், வீராங்கனைகள் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

Update: 2023-03-30 21:14 GMT


மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி புனே நகரில் கடந்த வாரம் நடந்தது. இதில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 1200 பாரா ஒலிம்பிக் தடகள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் மூலம் மாநில தடகள போட்டியில் தேர்வு பெற்ற சுமார் 80 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டிகள் ஊனத்தின் அடிப்படையில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 100, 200, 400, 800, 1500, 5000 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது.

இதில் தமிழக அணி வீரர்கள் 11 தங்கம், 5 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 29 பதக்கங்கள் பெற்றனர். மேலும் ஒட்டு மொத்த அளவில் 5-ம் இடம் பிடித்து தமிழக அணி சாதனை படைத்தது. இதில், தமிழக அணியில் மதுரையை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பல்வேறு சாதனைகள் படைத்துள்ளனர். அதில் மதுரையை சேர்ந்த மனோஜ் குண்டு எறிதலில் தங்கப்பதக்கம் பெற்று புதிய தேசிய சாதனை படைத்தார். செல்வராஜ் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். கணேசன், பிரசாந்த், ஜாஸ்மின், அருண்மொழி ஆகியோர் குண்டு எறிதலில் வெண்கலமும், முனியசாமி வட்டு எறிதலில் வெண்கல பதக்கமும் வென்றனர். இதன் மூலம் மதுரை வீரர்கள் தேசிய அளவில் 2 தங்கம், 5 வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை படைத்த வீரர், வீராங்கனைகள் மற்றும் அவர்களுக்கு பயிற்சியளித்த ரஞ்சித்குமார் ஆகியோருக்கு பாராட்டு விழா ரேஸ்கோர்ஸ் அரங்கில் நடந்தது. இதில் மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜா, தேனி ஆனந்தம் நிர்வாக மேலாளர் செல்வராஜ், பயிற்சியாளர்கள் குமரேசன், தீபா ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்