மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றுடீன் பிரின்ஸ் பயஸ் தகவல்

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நாட்டிலேயே 3-வது அரசு ஆஸ்பத்திரியாக தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது என டீன் பிரின்ஸ் பயஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-24 20:19 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நாட்டிலேயே 3-வது அரசு ஆஸ்பத்திரியாக தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது என டீன் பிரின்ஸ் பயஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயஸ் கூறியதாவது:-

தேசிய தரச்சான்று

மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட தகுதிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தேசிய மருத்துவமனை அங்கீகார வாரியம் (என்.ஏ.பி.எச்.) தரச்சான்று வழங்கி வருகிறது. இதுவரை உயரிய தனியார் மருத்துவமனைகள் மட்டுமே இந்த சான்று பெற்று வந்தன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு, இந்த ஆண்டு தரச்சான்று பெறுவதற்கான முயற்சியில், தமிழ்நாடு அரசு ஈடுபட்டது.

இதற்காக கன்னியாகுமரி, திருவண்ணாமலை மற்றும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் தேசிய தரச்சான்றினை பெறுவதற்கு விண்ணப்பித்தன. இதில் திருவண்ணமலை மற்றும் தேனி ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேசிய தரச்சான்று பெற்றன.

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு...

இந்த நிலையில் மத்திய மருத்துவ ஆய்வு குழுவினர் கடந்த மார்ச் மாதம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேரில் ஆய்வு நடத்தினர். அதைத்தொடர்ந்து, தேசிய தரச்சான்று பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

அதில், நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு என்.ஏ.பி.எச். தரச்சான்று வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக இந்த தரச்சான்றை பெறும் 3-வது அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி என்ற சிறப்பை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி பெற்று உள்ளது.

நன்றி

இதற்கு துணைநின்ற மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியின் சூப்பிரண்டு அருள்பிரகாஷ், உறைவிட மருத்தவர் ஜோசப் சென், உறைவிட மருத்துவர்கள் ரெனிமோள், விஜயலட்சுமி மற்றும் அனைத்து பேராசிரியர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்