கோவை ரத்தினபுரியில் போதை மாத்திரை விற்பனை

கோவை ரத்தினபுரியில் போதை மாத்திரை விற்ற மருந்து கடை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-12 18:45 GMT

கணபதி

கோவை ரத்தினபுரியில் போதை மாத்திரை விற்ற மருந்து கடை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் ரோந்து

கோவை மாநகர பகுதியில் போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கோவை ரத்தினபுரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் அங்குள்ள சம்பத் வீதியில் உள்ள மயானம் அருகே வந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் அங்கு நின்றிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த கும்பலை நோக்கி சென்றனர். போலீசாரை பார்த்ததும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

2 பேர் கைது

உடனே போலீசார் அந்த கும்பலை துரத்திச்சென்றபோது அதில் 2 பேர் மட்டும் சிக்கினர். போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள், கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்த சிவசங்கர் (வயது 40), ரத்தினபுரியை சேர்ந்த கார்த்திக் (29) என்பது தெரியவந்தது.

அத்துடன் அவர்களிடம் இருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது அதில், வலிநிவாரணத்துக்கு பயன்படுத்தப்படும் ஏராளமான மாத்திரைகள் இருந்தன. அந்த மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்த விற்பனை செய்து வந்ததும், அதில் சிவசங்கர் மருந்து கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 500 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

4 பேருக்கு வலைவீச்சு

கோவை மாநகர பகுதியில் உள்ள மருந்துகடைகளில் டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் யாராவது மருந்து, மாத்திரைகள் வாங்க வந்தால் கொடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம். ஆனால் மருந்து கடை உரிமையாளரே அதிக பணம் கிடைக்கிறது என்று ஆசைப்பட்டு வலிநிவாரண மாத்திரைகளை போதைக்காக கொடுத்து இருக்கிறார். எனவே அவருடைய கடையை சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய ஆகாஷ், சிரஞ்சீவி, விவேக், சீனுகார்த்திக் ஆகிய 4 பேர் போதை மருந்துகளை விற்பனை செய்து வருபவர்கள் ஆவார்கள். எனவே அவர்களை வலைவீசி தேடி வருகிறோம். இவர்கள் இந்த மாத்திரையை தண்ணீரில் கலந்து அதை ஊசியில் ஏற்றி அவற்றை கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்